நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட, பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலோ முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டாலோ, 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று சேலம் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக, இலவச மருத்துவ சேவைகளை செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு, நிர்ணயிக்கப்பட்ட கரோனா சிகிச்சைக்கான தொகுப்பு வீதம், தற்போதுள்ள தொற்று காலத்தில் மக்கள் நலன் காத்திடவும், கட்டணமில்லா சிகிச்சை வழங்கிடவும் திட்டப் பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள ஏ-1, ஏ-2 கிரேடு கொண்ட 16 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.18 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவு (வெண்டிலேட்டர் வசதி) சிகிச்சைக்கு ரூ.38 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதி சிகிச்சைக்கு ரூ.33 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு சிகிச்சைக்கு ரூ.28 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள ஏ-3 முதல் ஏ-6 வரை கிரேடு கொண்ட 21 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.16,500, தீவிர சிகிச்சை பிரிவு (வெண்டிலேட்டர் வசதி) சிகிச்சைக்கு ரூ.34,500, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதி சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு சிகிச்சைக்கு ரூ.25,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில், ஏ-1, ஏ-2 கிரேடு கொண்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.15 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவு (வெண்டிலேட்டர் வசதி) சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதி சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு சிகிச்சைக்கு ரூ.25 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு வெளியே உள்ள ஏ-3 முதல் ஏ-6 வரை கிரேடு கொண்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.13,500, தீவிர சிகிச்சை பிரிவு (வெண்டிலேட்டர் வசதி) சிகிச்சைக்கு ரூ.31,500, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதி சிகிச்சைக்கு ரூ.27 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு சிகிச்சைக்கு ரூ.22,500 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய கட்டணம், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இதர பொதுமக்கள் இருவருக்கும் பொருந்தும். முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற விரும்புவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டை காட்ட வேண்டும் மற்றும் மருத்துவ விருப்பப் படிவம் நிரப்பப்பட வேண்டும்.
காப்பீட்டு அட்டை தொலைந்து விட்டாலோ அல்லது உள்ளதா என்று அறியாவிட்டாலோ அவர்களது பழைய அல்லது புதிய குடும்ப அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு தொடர்பு அலுவலர் (Insurance Co-ordinator) அல்லது மாவட்ட திட்ட அலுவலர் அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077-ஐ தொடர்பு கொண்டு தங்கள் காப்பீட்டு அட்டை நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.
Remdesivir, Tocilizumab, Itolizumab போன்ற மருந்துகள் மற்றும் D- Dimer, IL6, LDH. Procalcitonin போன்ற பரிசோதனைகளுக்கும் கூடுதல் கட்டணம் பயனாளிகளின் சார்பாக மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கப்படும். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் பயனாளியிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.
மேற்கூறிய கட்டணம் பொது படுக்கை வசதிகளுக்கு மட்டுமே பொருந்தும். தனியறை, பிற வசதிகள் கொண்ட அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். மேலும், ஆக்சிஜன் இல்லா சிகிச்சைக்கு மாநகராட்சி எல்லைக்குள் ஏ-1, ஏ-2 கிரேடு மருத்துவமனைகள் கூடுதலாக ரூ.2,500/- காப்பீடு இல்லாத இதர பொதுமக்களிடம் கட்டணமாகப் பெறலாம்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட, பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலோ முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட்டாலோ, 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.