கரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரசு நலத்திட்டங்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்ட அளவிலான பணிக்குழுவின் முதலாவது கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. சுகாதாரப் பணிகள், காவல்துறை, சமூக நலத்துறை, சமூகப்பாதுகாப்புத்துறை, குழந்தை நலக்குழு, குழந்தைகள் இல்லம், சரணாலயம் ஆகியவற்றை சேர்ந்த மாவட்ட அளவிலான பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆட்சியர் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட அளவிலான பணிக்குழு மூலமாக செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப பொருளாதார நிலையை ஆய்வு செய்து அக்குடும்பங்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை உடனடியாக செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் இல்லங்களில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பாதுகாக்க குழந்தை நலக்குழு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஆற்றுப்படுத்துதலை உளவியலாளர்கள் மூலம் வழங்க வேண்டும். குழந்தைகள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆசிரமம் குழந்தைகள் இல்லம் தேர்வு செய்யப்பட்டு, கரோனா நோய் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
குழந்தைகள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அந்த மருத்துவ சிகிச்சை மையத்தில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் மேலும் தேவையான தகவல்களை திருநெல்வேலி மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலுவலகத்தை 0462 -2901953 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.