Regional02

தீ தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து - மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி :

செய்திப்பிரிவு

தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு விளக்கவுரை மற்றும் செயல்முறை பயிற்சி முகாம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் ச.குமார் தலைமை வகித்தார். தீயணைப்பு கருவிகளை கையாளுதல், பராமரித்தல் போன்றவை குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும், மருத்துவமனைகளில் தீ பாதுகாப்புக் குழு அமைத்து, காலமுறையாக தீபாதுகாப்பு சாதனங்களை கையாளுதல் குறித்த பயிற்சிகள் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. அவசர காலங்களில் பொதுமக்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பாக வெளியேற பயிற்சிகள் நடத்தப்பட்டன.

108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் பணியளார்களுக்கு அந்த ஊர்தியில் உள்ள தீயணைப்பு சாதனங்களை அவசர காலங்களில் கையாளுதல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டி.நேரு, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமனி, தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் த.முத்துப்பாண்டியன் மற்றும் தூத்துக்குடி நிலைய அலுவலர் ஜோ.சகாயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT