Regional01

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு - முதல் தவணைக்கு கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு : இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் பயன்படுத்த அழைப்பு

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு முதல் தவணை வழங்குவதற்காக 27 ஆயிரத்து 730 டோஸ்கள் கோவிஷீல்டு மற்றும் 3 ஆயிரத்து 550 டோஸ்கள் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பில் உள்ளன. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி கடந்த 24-ம் தேதி முதல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

18 முதல் 44 வயது வரையுள்ள 31,299 நபர்களுக்கு கடந்த 26-ம் தேதி வரை கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இரண்டாம் தவணை மட்டும் வழங்கப்படுகிறது.

தற்சமயம் 18 முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு முதல் தவணை வழங்குவதற்காக 27 ஆயிரத்து 730 டோஸ்கள் கோவிஷீல்டு மற்றும் 3 ஆயிரத்து 550 டோஸ்கள் கோவேக்சினும் கையிருப்பில் உள்ளன. 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இரண்டாம் தவணை வழங்க ஆயிரத்து 990 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளன.

இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், உடனடியாக இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை கரோனா தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT