Regional02

ஊரடங்கு காலத்தில் மக்கள் ஒன்றாக கூடினால் நடவடிக்கை : கிருஷ்ணகிரி டிஎஸ்பி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் ஒன்றாக கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி டிஎஸ்பி எச்சரித்தார்.

கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் உள்ள கணபதி நகரில், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்குடியிருப்புகளுக்கு எதிரில், நகராட்சி மின்மயான தகன மேடை உள்ளது. இங்கு கரோனா இறப்பின் காரணமாக தினமும் 10 முதல், 25 சடலங்கள் எரித்து வந்தனர். இதனால் வெளியேறும் புகை ராட்சத குழாய் வழியாக மேலே செல்கிறது. ஆனால் இதில் ஏற்பட்ட பழுதால் தற்போது புகை கீழிருந்து வெளியேறி குடியிருப்பில் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து இரவிலும், வெளியில் இருந்து கொண்டுவரப்படும் சடலங்களை எரிக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் தற்போது 10 சடலங்கள் வரை மட்டுமே எரிக்கப்படுவதால் புகை மேலே உள்ள குழாயில் மட்டுமே செல்வதாக நகராட்சி ஆணையர் சந்திரா தெரிவித்தார். ஆனால் இப்பகுதி மக்கள் புகை கீழே செல்வதை சரி செய்யும் வரை சடலங்களை எரிக்க விடமாட்டோம் என நேற்று காலை தர்ணாவில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகர டிஎஸ்பி சரவணன், கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் யாரும் ஒன்றாக சேரக்கூடாது என்றும், தற்போது குறைந்த அளவில் சடலங்களை எரிப்பதால், புகை கட்டாயம் கீழே வராது, அவ்வாறு பொதுமக்கள் ஒன்று கூடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT