கோபி அருகே மருத்துவப் படிப்பு படிக்காமல், அலோபதி மருத்துவம் பார்த்தவரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காசிபாளையத்தில் நாகராஜ் (58) என்பவர், அவரது வீட்டில், மக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து, மருந்து மாத்திரைகளை வழங்கி வருவதாக சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது. இதன்பேரில், காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் யசோதா பிரியா தலைமையிலான அலுவலர்கள், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றை வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், நாகராஜ் மருத்துவ படிப்பு படிக்காமலும், மருத்துவ சான்று ஏதுவும் இல்லாமலும் மக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தூர் போலீஸார் நாகராஜ் மீது மோசடி மற்றும் மருத்துவ கவுன்சில் சட்டத்தின் படி வழக்குப் பதிந்து கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். கைதான நாகராஜிடம் இருந்து காய்ச்சல் மாத்திரைகள், ஊசி மருந்துகள், மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட ரசீது போன்றவற்றை கைப்பற்றினர்.