பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்கும் குழுவில் மாணவிகள் 2 பேர் சேர்க்கப்படுவார்கள் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிப்பது, முறைப்படுத்துவது தொடர்பாக கல்வித் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 342 பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளை ஆசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்து நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் அறிவுறுத்தி இருப்பதைப் போன்று இந்த வகுப்புகளை முறைப்படுத்தி, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆன்லைன் வகுப்புகள் முழுவதும் பதிவு செய்யப்பட்டு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் கண்காணிக்கப்படும். இதற்காக ஏற்படுத்தப்படும் குழுவில் மாணவிகள் 2 பேர் சேர்க்கப்படுவர்.
ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளி ஆசிரியர்களின் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் குறித்த சந்தேகங்கள், புகார்களை 04322 222180 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.