Regional01

வங்கிப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி : திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் புதிய கலையரங்க மண்டபத்தில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட வங்கி அலுவலர்கள், பணியாளர்களுக்கு நேற்று கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை ஆட்சியர் சு.சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் மே 25-ம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள பத்திரிகை சார்ந்த பணியாளர்கள், பால் விநியோகம் செய்பவர்கள், தெருக்களில் விற்பனையில் ஈடுபடுவோர், மளிகைக் கடைகளில் வேலை செய்வோர், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவு விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுவோர், ஆட்டோ- டாக்ஸி, பேருந்து ஓட்டுநர்கள்- நடத்துநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பள்ளி- கல்லூரி ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகரில் தேவர் ஹால் மற்றும் மாநகராட்சியின் அரியமங்கலம், பொன்மலை, கோ அபிஷேகபுரம், ரங்கம் ஆகிய கோட்ட அலுவலகங்களிலும், பாலக்கரை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளி, பாரதியார் சாலை ஆர்சி மேல்நிலைப் பள்ளி, மேலப்புதூர் பிஷப் ஹைமன் தொடக்கப் பள்ளி, எடமலைப்பட்டிப்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது.

இதேபோல, மாவட்டத்தில் அந்தநல்லூர், திருவெறும்பூர், லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம், மணப்பாறை, வையம்பட்டி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து, மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் சு.சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT