ஈரோடு அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களின் பயன்பாட்டை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திர செயல்பாடு தொடக்க விழாவில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:
டெக்ஸ்வேலி மற்றும் பிஎன்ஐ அமைப்பின் சார்பில், ரூ.50 லட்சம் மதிப்பில், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை வழங்கியுள்ளனர். இந்த இயந்திரங்கள் மூலம் நிமிடத்திற்கு 200 லிட்டர் ஆக்சிஜன் தயாரித்து,100 நோயாளிகளுக்கு, தொடர்ந்து ஆக்சிஜன் விநியோகம் செய்யமுடியும். ஈரோடு அரசு மருத்துவ மனையில் 131 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் உள்ளன. புதிதாக 40 ஆக்சிஜன் இணைப்பு படுக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் இதனை 250 படுக்கையாக உயர்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் 1,550 படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியுடன் வருவோரை தங்க வைக்க தனி வசதி செய்ய உள்ளோம். நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்ய, தன்னார்வலர்கள் உள்ளனர். தன்னார்வலர் பணி செய்ய விரும்பும் நபர்கள் எங்களை அணுகி சேவையை தொடரலாம்.
தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிக்கு சிகிச்சை தருவதில் சிக்கல் இருந்தால் மாவட்டநிர்வாகத்தை அணுகலாம். எந்த காரணத்துக்காகவும், நோயாளிக்கு சிகிச்சைதர தாமதம் செய்யக்கூடாது. இப்பிரச்சினையை தீர்க்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், எஸ்பி தங்கதுரை, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.