சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 900-க்கும் கூடுதலாகவே இருந்து வருகிறது. ஒரே தெருவில் 3 முதல் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டால், அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேற தடை விதிக்கப்படுகிறது. மேலும், அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 175 ஆக அதிகரித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 6 ஆயிரத்து 268 வீடுகளைச் சேர்ந்த 24 ஆயிரத்து 940 பேர் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய மக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு, சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதோபோல மாவட்ட பகுதியில் மக்களுக்கு கரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 953 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதனிடையே, மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 98 ஆயிரத்து 538 ஆகவும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 658 ஆகவும் உள்ளது.