தூத்துக்குடி மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. மேலும், தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக இந்த மையங்களுக்கு தடுப்பூசி போட வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநகராட்சி மையங்களில் இதுவரை 12,650 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,632 பேர் ஆவர்.
இளைஞர்கள் அதிகளவில் வருவதைத் தொடர்ந்து கூடுதலாக 2 தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தூத்துக் குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் காமராஜ் கல்லூரி ஆகிய இரு இடங்களில் தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை தமிழக சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தார். ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி உடனிருந்தனர்.
கோவில்பட்டி
தொடர்ந்து தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம், நகராட்சி அலுவலகம், தற்காலிக சந்தை இயங்கும் புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறும்போது, “ கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள், லேப் டெக்னீஷியன், மருத்துவர்கள் தேவை எனக் கேட்டுள்ளனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி 15 நாட்களில் முடிவடையும். இதன் மூலம் இந்த மருத்துவமனையின் ஆக்சிஜன் தேவை பூர்த்தியாகும்.
கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படும் சந்தைக்கு அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரிகள் மட்டுமே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.