சேலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நேற்று குமாரசாமிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட வரிசையில் காதிருந்த பொது மக்கள். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு - கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதையடுத்து, நேற்று இளைஞர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் தினசரி 900 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் தொற்றை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தி வருகின்றன.

இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இளைஞர்கள் பலரும் தடுப்பூசியை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.

அதேவேளையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை முதல் தவணை போட்ட நிலையில், இரண்டாம் தவணை கோவேக்சின் தடுப்பூசி போட நேற்று காலை முதல் 200-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்திருந்தனர்.

ஆனால், அங்கு தடுப்பூசி இல்லை என அறிவிப்பு பலகை வைத்திருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

SCROLL FOR NEXT