கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பாணிப்பட்டியில் புதிய கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். அருகில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி. 
Regional02

கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை : கிருஷ்ணகிரியில் அமைச்சர் காந்தி தகவல்

செய்திப்பிரிவு

கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரியில் அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சப்பாணிப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் ஆய்வு செய்து, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் வரவேற்றார். கேவிஎஸ் குழுமங்களின் நிர்வாக இயக்குநரும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கே.வி.எஸ் சீனிவாசன், கே.எம்.சுப்பிரமணி, கே.எம்.சுவாமிநாதன், கே.என்.கற்பூரசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செல்லக்குமார் எம்பி, சட்டப் பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மதியழகன், முன்னாள் எம்எல்ஏ முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் கூறியதாவது:

மாவட்டத்தில் இதுவரை 28 ஆயிரத்து 882 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு 20 ஆயிரத்து 325 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 8 ஆயிரத்து 376 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் வீட்டு தனிமையில் 6502 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டு தனிமையில் சிகிச்சை பெற முடியாதவர்களுக்காக, சப்பாணிப்பட்டியில் கேவிஎஸ் குழுமம் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் 104 படுக்கை வசதியுடன்அமைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இங்கு ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை களும் உள்ளன.

மேலும், காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் ரூ.5 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் வசதியுடன் 30 படுக்கைகள் செய்துகொடுத்துள்ளனர். அரசுடன் இணைந்து கரோனா பாதித்தவர் களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார்.

தேன்கனிக்கோட்டையில் ஆய்வு

ஆய்வுப் பணிகளின்போது எம்பி செல்லகுமார், ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT