கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தனியார் உரக்கடைகள், விதை மையங்களை தினமும் மூன்று மணி நேரம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியருக்கு அவர் அனுப்பி உள்ள கோரிக்கை மனு:
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விவ சாயிகள், தங்களது வயல்களில் வைகாசி மாத பயிரிடுதலுக்கு தயாராக வேண்டும். அதற்கான விதைகள் வாங்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் பயிரிடப் பட்டுள்ள தக்காளி செடியில் காய்ப்புழு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கும் மருந்துகள் வேண்டும். மாவிலும் அசுவனி தத்து பூச்சிகள் வந்து உள்ளன. இதற்கும் அவசியம் மருந்து தெளிக்க வேண்டும். இல்லையெனில் மாங்காய்களில் கருப்பு நிறம் பரவி சாப்பிட முடியாது. நெல் வைகாசி பட்டத்துக்கு தேர்வு செய்து வைக்க வேண்டும்.
இதற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை மிக சன்னரகங்கள் தேவைப்படு கின்றன. இவை அனைத்தும், தனியார் உரக்கடைகளில் மட்டும்தான் கிடைக்கின்றன. குறுகிய கால காய்கறிகள் விதைகளும், தனியார் விதை மையங்களில் மட்டுமே கிடைப்பதால், விவசாயிகளுக்கு அதிகம் தற்போது தேவைப் படும், விதைகள், உரங்கள், பூச்சிமருந்துகளை சிரமமின்றி பெரும் வகையில், தனியார் உரக் கடைகள், விதை மையங்களை காலை 6 மணி முதல் 9 மணி வரை இயங்க அனுமதிக்க வேண்டும்.