கரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை பிடிக்க சேலம் ஆட்சியர் அலுவலகம், அஸ்தம்பட்டி ரவுண்டானா, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸார் தடுப்பு வேலி அமைத்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாநகர் பகுதியில் 700 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸார் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். தேவையின்றி வாகனத்தில் வந்தவர்களை போலீஸார் எச்சரிக்கை செய்து அனுப்பினர். ஒரு சிலருக்கு அபராதம் விதித்தனர்.
அதேபோல இருசக்கர வாகன ரோந்து பிரிவு போலீஸார் மாநகர் பகுதி முழுவதும் ட்ரோன் கேமரா மூலம் சாலைகளை கண்காணித்து, தேவையின்றி சுற்றி வருபர்களை பிடித்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
“முழுஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கும்படி” சேலம் மாநகர காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.