தூத்துக்குடி மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரையுள்ளவர்கள் கரோனா தடுப்பூசி போட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி 88 இடங்களில் நடைபெற்று வருகிறது. அரசுசார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய போதிலும், 45 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் தடுப்பூசி போடுவதில் தயக்கம் இருந்து வருகிறது.
இந்நிலையில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. அனைத்து கட்டிடத் தொழிலாளர்கள், வெளி மாநிலதொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனை கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வயது பிரிவினர் மத்தியில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காணப்படுகிறது. முதல் நாளானநேற்று முன்தினமே அனைத்து மையங்களிலும் ஏராளமான இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 2-வது நாளாக நேற்றும் அதிகளவிலான இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தூத்துக்குடி பகுதியில் உள்ளவர்களுக்கு மில்லர்புரம் தூயமரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு போடுவதற்காக முதல் கட்டமாக 26,500 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு வந்துள்ளன. விரைவில் அடுத்த கட்டமாக தடுப்பூசி வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவில்பட்டி
எப்போதும்வென்றானில் கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் பங்கேற்றனர்.