Regional04

கருப்பு பூஞ்சை நோய்க்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை : புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்டவர்கள், சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் கருப்பு பூஞ்சை நோயால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்கான அறிகுறிகள் காணப்பட்ட 2 பேரில் ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்றொருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் ஒரு சிலர் மியூக்கோர்மைக்கோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணிலும், கண்ணைச் சுற்றியும் கடுமையான வலி, காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், ரத்த வாந்தி, மனச்சிதைவு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

எனவே, கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கு இதுபோன்ற நோய் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும்கூட, உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT