திருநெல்வேலியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் சிலர் கோயிலுக்கு வெளியே நின்று சுவாமி கும்பிட்டு சென்றனர்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருநெல்வேலியிலுள்ள முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குறுக்குத்துறை முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. இதுபோல் பாளையங்கோட்டை மேலவாசல் முருகன் கோயில், திருநெல்வேலி சந்திப்பு சாலைகுமாரசுவாமி கோயில், ராஜவல்லிபுரம் செப்பரை அழகிய கூத்தர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் சிலர் வெளியே நின்றுகொண்டு சுவாமி கும்பிட்டு சென்றனர்.