Regional01

ஈரோடு மாவட்டத்தில் 6.37 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை : வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் 6 லட்சத்து 37 ஆயிரத்து 679 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதுவரையில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 422 பேர் கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர், என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அமைக்கப்பட்டு வரும் கூடுதல் படுக்கை வசதிகளை நேற்று பார்வையிட்ட வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வரப்பெற்றுள்ள நிதிகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பரிசோதனை ஆய்வகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பெருந்துறை அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்கு ஒளிரும் ஈரோடு அமைப்பின் சார்பில், 30 ஆக்சிஜன் செறிவு இயந்திரங்கள் அமைச்சரிடம் வழங்கப்பட்டன. அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளில் 668 பேரும், ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளில் 252 பேரும், தீவிர சிகிச்சை பிரிவில் 70 பேர் என 990 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதம்18 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் 3375 படுக்கைகள் உள்ளன. இதில், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் 25 பேரும், அல்லாத படுக்கைகளில் 1161 பேர் என மொத்தம் 1186 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2189 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளில் 614 பேரும், ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளில் 727 பெரும், தீவிர சிகிச்சை பிரிவில் 163 பேர் என 1504 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதம் 162 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் 7091 பேர் வீட்டுத்தனிமையில் உள்ளனர். மேலும், ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் 135 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 567 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 23-ம் தேதி வரை மாவட்டத்தில் 6 லட்சத்து 37 ஆயிரத்து 679 பேர் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதுவரையில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 422 பேர் கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT