Regional01

சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆய்வு :

செய்திப்பிரிவு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், சிகிச்சை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வழிகாட்டுதல் மையங்கள் மூலம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு சாதாரண படுக்கை வசதிகள் 265, ஆக்சிஜன் படுக்கை வசதிகள் 665, அவசர சிகிச்சைப் பிரிவில் 170 படுக்கை வசதிகள் என மொத்தம் 1,100 படுக்கை வசதிகள் உள்ளன. எனினும், இவற்றில் ஆக்சிஜன் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு உள்பட அனைத்துப் படுக்கைகளும் கரோனா நோயாளிகளால் நிரம்பிவிட்டன.

இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு நேற்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை கரோனா வழிகாட்டுதல் மையத்தை ஆய்வு செய்த அவர், அங்கு இட வசதியை அதிகரிக்க வலியுறுத்தினார். தொடர்ந்து, கரோனா நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றின் விவரங்களை டாக்டர் நாராயண பாபு கேட்டறிந்தார். ஆய்வின்போது, மருத்துவமனை டீன் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தனபால், உறைவிட மருத்துவர் டாக்டர் ராணி, நலப்பணிகள் இணை இயக்குநர் மற்றும் துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டது

SCROLL FOR NEXT