மத்திய மண்டலத்தில் கரோனா முழு ஊரடங்கை மீறி, தகுந்த காரணமின்றி வாகனங்களில் வெளியே வந்தவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி, மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று வாகன போக்கு வரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பல்வேறு இடங்களில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி வாக னச் சோதனையில் ஈடுபட்டனர். தகுந்த காரணங்கள் இன்றி வெளியே வந்தவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
தளர்வுகள் அற்ற ஊரடங்கு காரணமாக காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவையும் மூடப்பட்டிருந்ததால், முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடின. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வாகனங்களில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன.
அந்த வகையில், நாகை மாவட்டத்தில் நாகை நகராட்சியில் 15, மயிலாடுதுறை நகராட்சியில் 18, வேதாரண்யம் நகராட்சியில் 1, சீர்காழி நகராட்சியில் 3 என 37 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 101 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் வழங்கும் திட்டத்தை பெரம்பலூர் உழவர் சந்தையில் எம்எல்ஏ எம்.பிரபாகரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி, துணை இயக்குநர்(வேளாண் விற்பனை) சிங்காரம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாத்திமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 201 ஊராட்சி பகுதிகளில் 78, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் தலா 21, உடையார் பாளையம் பேரூராட்சியில் 6, வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 4 என மொத்தம் 130 நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 261 வாகனங்களில் காய்கறி விற்பனை தொடங்கிய நிலையில், அரிமளம் அருகே போசம்பட்டியில், வாகனம் மூலம் காய்கறி விற்பனை செய்வதை மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் 40 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை தொடக்க விழா ஆணையர் முத்துக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், விற்பனையை எம்எல்ஏ இரா.மாணிக்கம் தொடங்கிவைத்தார்.