தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறை அடுத்த ஈச்சங்குடியைச் சேர்ந்தவர் பாலன்(50). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரனுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2019-ம் ஆண்டு சந்திரனை, பாலன் அரிவாளால் வெட்டியதில் படுகா யமடைந்தார்.
இதையடுத்து, சந்திரன் அளித்த புகாரின்பேரில், பாலனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பாலன், கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள்கோவிலில் தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்து பூ வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் பூ வியாபாரம் செய்ய சென்ற பாலன் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது மகன் பாபு கபிஸ்தலம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் பாலனை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருவையாறை அடுத்த சிறுபுலியூர் கிராமத்தில் உள்ள விஜயகுமார் என்ப வரின் வயலில் கொலை செய்யப்பட்டநிலையில் பாலனின் சடலம் நேற்று கிடந்துள்ளது. தகவலறிந்து, அங்கு சென்ற எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய், திருவையாறு டிஎஸ்பி சித்திரவேல் மற்றும் திருவையாறு போலீஸார், பாலனின் சடலத்தை கைப்பற்றி, பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், சந்திரனின் மகன் ராஜதுரை(32), தனது தந்தையை வெட்டிய பாலனை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு, தனது நண்பர் களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் உமையாள்புரத்தில் பூ வியாபாரம் செய்த பாலனை காரில் கடத்திச் சென்று கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருவையாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராஜதுரை மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.