ஊரடங்கு தளர்வையொட்டி, சேலத்தில் இருந்து நேற்று அரசுப் போக்குவரத்துக் கழகம்சார்பில் பேருந்துகள் இயக்கப் பட்டபோதிலும், பயணிகள் வருகை குறைவாக இருந்தது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், இன்று (24-ம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
இதனையொட்டி, நேற்று முன்தினமும் நேற்றும் பேருந்துகள் இயக்க அரசு அனுமதியளித்தது.
இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று சென்னை, திருவண்ணாமலை, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
எனினும், முதல்முதலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதே, மக்கள் ஏராளமானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், நேற்று பேருந்துகள் இயக்கப்பட்டபோதிலும், பயணி கள் வருகை குறைவாகவே இருந்தது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்தனர்.
இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் மோகன் கூறும்போது, “பயணிகள் வருகைக்கு ஏற்ப அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த இரு தினங்களில் 800 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. திருவண்ணா மலை உள்ளிட்ட சில நகரங்களுக்கு அதிக எண்ணிக்கை யிலான பயணிகள் வந்திருந்தனர்” என்றார்.
தனியார் பேருந்துகளில் பெரும்பாலானவை நேற்று இயக்கப் படவில்லை. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பேருந்துகளை ஒரு மாதம் தொடர்ந்து இயக்காமல் இருந்தால், அவர்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை, மேலும், சாலை சுங்கக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. எனவே, ஒரு நாள் மட்டும் பேருந்துகளை இயக்குவதற்கு அரசு வரி, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதை தவிர்க்க, பெரும் பாலான தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை” என்றனர்.