Regional02

கரோனா பரிசோதனை முடிவு அறிவிப்பதில் தாமதம் : � தொற்று பரவல் அதிகரிப்பதாக பெருந்துறை எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பெருந்துறை அரசு மருத்துவ மனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு முடிவுகள் அறிவிக்க 5 நாட்கள் ஆவதால், தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என பெருந்துறை எம்.எல்.ஏ. எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவனுக்கு, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஜெயக்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாகச் சீர்கேடுகள் நிலவுவதால், கரோனா நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றால் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர் புவனேஷ்வரிக்கு இதுவரை அரசின் இழப்பீடு கிடைக்கவில்லை. நேற்று முன் தினம் ஆய்வக உதவியாளராக பணி புரிந்த ஜெமினி என்பவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இது போல உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளும், அவர்களுக்குத் தேவையான ஓய்வும் வழங்கப்படுவது இல்லை. நிர்வாக அதிகாரி பதவியிடம் நிரப்பப்பட்டால், இத்தகைய நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும்.

மேலும், மருத்துவமனையில் பிரதான வாயில் பூட்டப்பட்டு, கரோனா சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் விரட்டப்படுவது அன்றாட சம்பவமாக மாறியுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் உள்ளிட்ட நிர்வாக குழு மருத்துவர்கள் யாரிடமும் பேச முடிவதில்லை. நோயாளிகளுக்கு நுழைவு வாயிலில் எந்த ஒரு தகவலும் முறையாக சொல்லப்படுவதில்லை.

கரோனா பாதிக்கப்பட்ட வர்களையும், தடுப்பூசி போட வருபவர்களையும், நோய் தாக்குதல் இல்லாதவர்களையும் ஒரே இடத்தில் கூட வைத்திருக்கும் அபாயகரமான நிலை இம்மருத்துவமனையில் நிலவுகிறது. மேலும், இம்மருத்துவ மனையில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகள், ஐந்து நாட்கள் கழித்து தான் வெளியிடப்படுகிறது. இதனால் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் இப்புகார்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT