முழு ஊரடங்கு அமல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்கறிகளை பல மடங்கு விலை உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்ததாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலாகிறது. நேற்று மட்டுமே கடைகளில் காய்கறிகள், மளிகை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி என்பதால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை,தாம்பரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்டஇடங்களில் உள்ள மார்க்கெட்களில் கூட்டம் அலை மோதியது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களை விட நேற்று வெங்காயம், தக்காளி என அனைத்து காய்கறிகள் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் எந்த கடைகளிலும் நேற்று கரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள், வியாபாரிகள் பின்பற்றவில்லை. இதனால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.