ஓசூர் அருகே தனியார் நிறுவன அதிகாரியின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து ரூ.8.54 லட்சம் எடுத்தவரை சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாகபணிபுரிபவர் செந்தில்நாதன் (62). இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நூற்பாலை ஒன்றில் இருந்து ரூ.8.54 லட்சம் மதிப்பிலான பொருட்களை அண்மையில் வாங்கியுள்ளார்.
இதற்கான தொகையை ஆன்லைன் மூலம் அந்த நூற்பாலைக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி நூற்பாலை நிர்வாகத்தினர் மீண்டும் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது, உரிய தொகையை ஏற்கெனவே ஆன்லைன் முறையில் செலுத்தி விட்டதாக செந்தில்நாதன் கூறியுள்ளார். ஆனால், அத்தொகை உரியவர் வங்கிக் கணக்குக்கு போய் சேரவில்லை.இதையடுத்து, செந்தில்நாதன், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், செந்தில் நாதனின் வங்கிக் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து பணத்தை எடுத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.