தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள் வதற்காக அனைத்து கடைகளும் திறக்க நேற்று முன்தினம் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக கடைகளில் மக்கள் குவிந்தனர். இதனால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகளில் இருப்பதைப் போல் நேற்று அனைத்து மளிகை, காய்கறிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் காய்கறிகளை வாகனங்களில் தெருக்களுக்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும் காய்கறி கடைகளில் மக்கள் குவிந்தனர்.
இதை பயன்படுத்தி காய்கறிகள் விலையை வியாபாரிகள் கடுமையாக உயர்த்தினர். பெரும்பாலான காய்கறிகள் விலை முந்தைய நாளை விட பல மடங்கு அதிகமாக இருந்தது.
காய்கறிகள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற சந்தேகத்தில் சொன்ன விலையை கொடுத்து பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். இதேபோல், பல மளிகைக் கடை களிலும் பலசரக்கு பொருட்களின் விலையை திடீரென வியாபாரிகள் உயர்த்தி விட்டனர். இருசக்கர வாகனங்களில் சிறிய பழுதுகளை சரிசெய்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர். வழக்கமாக பொங்கல், தீபாவளி பண்டிகையின் போது அலைமோதும் கூட்டத்தை போல் நேற்று கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.
திருநெல்வேலி
தக்காளி, வெண்டை கிலோ ரூ.80, புடலங்காய் 50, கேரட் 200, பல்லாரி 40, சின்ன வெங்காயம் 80 முதல் 100 வரை, தேங்காய் 40, உருளை 60, கத்தரிக்காய் 80, நெல்லிக்காய் 80, பீன்ஸ் 120, மாங்காய் கிளி மூக்கு 50, நாடு ரகம் 100, பட்டர் பீன்ஸ் 300, முருங்கைக்காய் 100, கருணைக் கிழங்கு 80, சேம்பு 60, பீட்ரூட் 60-க்கு விற்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு சலூன்கள் திறக்கப்பட்டதால் ஏராளமானோர் நீண்ட நேரம் காத்திருந்து முகச்சவரம் மற்றும் முடி திருத்தம் செய்து சென்றனர்.
பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை சாலை, திருநெல்வேலி ரத வீதிகளில் மக்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. சந்தைகளில் தனிமனித இடைவெளியை புறந் தள்ளிவிட்டு ஒருவரை யொருவர் நெருக்கியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.
தூத்துக்குடி
காய்கறிகளின் விலை திடீரென பல மடங்கு உயர்ந்தது. கத்தரிக்காய் கிலோ ரூ.100, தக்காளி ரூ.50, சின்ன வெங்காயம் ரூ.80, பல்லாரி ரூ.60, பீன்ஸ் ரூ.300, காலி பிளவர் ஒன்று ரூ.100, அவரை கிலோ 200, கேரட் ரூ.100, பீட்ரூட் ரூ.30, சவ்சவ் ரூ.30, உருளை ரூ.60, புடலை ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டன.
காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என , மாநகராட்சி அலுவலர்கள் ஒலிபெருக்கியில் எச்சரித்த போதும் வியாபாரிகள் அதை பொருட்படுத்தாமல் அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.
கோவில்பட்டி
பலசரக்கு கடைகள், ஜவுளி கடைகள் என அனைத்து கடைகளி லும் கூட்டம் அதிகமிருந்தது. முக்கிய சாலைகளில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.
கன்னியாகுமரி
பாவூர்சத்திரத்தில் விற்றுத் தீர்ந்த காய்கறிகள்
பாவூர்சத்திரம் சந்தையில் ஏராளமான சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதனால் அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு 10 முதல் 50 ரூபாய் வரை விலை உயர்ந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “வழக்கமான அளவில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. ஆனால், சில்லறை வியாபாரிகள் அதிகமானோர் வந்ததால் விறுவிறுப்பான வியாபாரம் நடைபெற்றது. இதனால் அனைத்து காய்கறிகளும் விரைவாக விற்றுத் தீர்ந்தன. விலையும் அதிகரித்தது. 18 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம் 30 முதல் 32 ரூபாய்க்கு விற்பனையானது. 40 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம் 55 ரூபாய்க்கு விற்பனையானது. 60 ரூபாயாக இருந்த கத்தரிக்காய் 130 ரூபாய்க்கும், தக்காளி 30 ரூபாய்க்கும், கேரட் 50 முதல் 60 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும் விற்பனையானது. கத்தரிக்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலை 2 மடங்கு உயர்ந்தது” என்றனர்.