ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள அம்மா திருமணமண்டபத்தில், கரோனா சிகிச்சைமையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்றின் 2-வதுஅலை தற்போது தீவிரமாக பரவிவருவதால், ஆவடியில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் கரோனாசிகிச்சை மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, “வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள அம்மா திருமண மண்டபம், குடியிருப்புகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் அடுக்குமாடி குடியிருப்புகளும், நெருக்கமான வகையில் தனிக் குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், இக்குடியிருப்புகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமணமண்டபத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த மண்டபத்தை நேரில் வந்து ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளனர். ஏற்கெனவே, இக்குடியிருப்பில் வசிக்கும் பலர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சிகிச்சை மையம் அமைத்தால் மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அம்மா திருமண மண்பத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்” என்றனர்.