கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய ஆறு தென்பெண்ணை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
குறிப்பாக காவேரிப் பட்டணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் இந்த ஆற்றையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த ஆறு முழுவதும் ஆகாயத்தாமரையால் நிரம்பியுள்ளது.பாதிக்கும் மேல் அழுகிய நிலையில் இருப்பதால் துர்நாற்றத்துடன் தண்ணீரும் மாசடைந்து வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், எஞ்சியுள்ள நீரிலும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி கழுவுவதாலும், கோழிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதாலும் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, கோழிக் கழிவுகள், குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தற்போது உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி தென்பெண்ணை ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.