திருச்செந்தூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறும்போது, “கடந்த ஆட்சியில் பலமுறை சட்டப்பேரவையில் திருச்செந்தூரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றுவது குறித்து பேசினேன். அப்போது அமைச்சராக இருந்தவர் இத்திட்டம் 6 மாத காலத்தில்முடியும் என்றார். ஆனால் இதுவரை இத்திட்டம் முடியவில்லை. தற்போது திருச்செந்தூர் பாதாளசாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்தோம். இதில், 5 மாத காலத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் வீடுகளில் ரூ.8,500 செலவில் பில்டர் அமைத்து கொடுக்கப்படும். இந்த தொகை தவணை முறையில் வசூலிக்கப்படும். மேலும், பாதாள சாக்கடைத் திட்டத்தில் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் தண்ணீரை மீண்டும் மறுகாலில் விடுவதை தவிர்த்து, ஆலந்தலை பகுதியில் 83 ஏக்கரில் புல் வளர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் திருச்செந்தூர் நகரைதூய்மையான நகராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
ஆய்வில் கோட்டாட்சியர் தனப்பிரியா, குடிநீர் வடிகால் வாரியநிர்வாக பொறியாளர் லதா ஜெயின் நவீன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் வடக்கு தெருவைச் சேர்ந்த 9 மீனவர்களின் வீடுகள் மற்றும் 7 பைபர் படகுகள் சேதமடைந்தன. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகசார்பில் ரூ.15 லட்சம் நிதியை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், பங்குத்தந்தை ஜெயக்குமாரிடம் வழங்கினார். ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங், காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உடனிருந்தனர்.