Regional02

துறையூர்- பெரம்பலூர் சாலை விரிவாக்கப் பணி தொய்வு : வாகன ஓட்டிகள் அவதி; ஊரடங்கை பயன்படுத்தி பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் துறையூர்- பெரம்பலூர் இடையிலான மாநில நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து பெரம்பலூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை(எண் 142) ஏறத்தாழ 30 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த சாலை குறுகலாக இருந்ததாலும், வாகனங்களின் எண்ணிக்கை பெருகி விட்டதாலும், இந்த சாலையை தரம் உயர்த்த வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ரூ.150 கோடி மதிப்பீட்டில் இந்த சாலையை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த இரு மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக, விரிவாக்கப் பணிக்காக சாலையின் ஓரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு, 20 நாட்களுக்கு மேல் ஆகியும், தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சரவணன் நடசேன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

விரிவாக்கப் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகியும், தொடர்ந்து பணிகள் நடைபெறவில்லை. இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எச்சரிக்கை பலகையோ, தடுப்புகளோ வைக்கப்படவில்லை. மண் மூட்டைகளை மட்டுமே ஆங்காங்கே வைத்துள்ளனர். கனரக வாகன ஓட்டுநர்கள் சிறிது கவனக் குறைவாக இருந்தால், வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விடும் சூழல் உள்ளது.

இந்த சாலையை அமைத்து வரும் திட்ட அலுவலர்களிடம் விசாரித்தபோது, சாலை விரிவாக்கத்துக்கு தோண்டப்பட்ட பள்ளங்களை நிரப்ப மண் கொண்டு வருவதற்கு அனுமதி கிடைக்காததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

வாகன நடமாட்டம் அதிகம் இல்லாத இந்த ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்தி, சாலைப் பணியை விரைந்து மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT