தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வின் காரணமாக நேற்று மாலை, மாவட்டத் தலைநகரங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும், மக்கள் கூட்டம் அதிகமில்லை. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கூட்டம் சேர்வதற்காக பேருந்துகளுடன் சேர்ந்து, ஓட்டுநர், நடத்துநர்களும் காத்திருந்தனர். (அடுத்த படம்) தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் நேற்று மாலையில் பேருந்துகளை எதிர்பார்த்து பயணிகள் காத்திருந்தனர். படங்கள்: மு.லெட்சுமி அருண், என்.ராஜேஷ். 
Regional01

ஊரடங்கு தளர்வால் கடைவீதிகளில் கூட்டம் - வெளியூர்களுக்கு பயணிகளின்றி இயங்கிய பேருந்துகள் :

செய்திப்பிரிவு

ஊரடங்கு தளர்வால் கடைவீதிகளில் நேற்று மாலையில் மக்கள் திரண்டனர். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்ற பேருந்துகள் மிகக்குறைந்த பயணிகளுடன் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் நாளை முதல் தளர்வில்லா முழுஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டி, நேற்றும், இன்றும் கடைகளைத் திறக்கவும், பேருந்துகளை இயக்க வும் அரசு அனுமதித்தது. இது தொடர்பாக, அறிவிப்பு வந்ததும் திருநெல்வேலியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளுக்கு மக்கள் திரண்டனர். சாலைகளில் வாகன போக்குவரத்து சகஜமாக இருந்தது.

காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் திரண்டதால் பாளையங் கோட்டை மார்க்கெட் பகுதி, டவுன் ரதவீதிகளில் வழக்கம்போல் கூட்டம் காணப்பட்டது. திருநெல் வேலியிலிருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசுப் பேருந்துகள் நேற்று மாலையிலிருந்து இயக்கப்பட்டன. ஆனால், இந்த பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. கார்களும், ஆட்டோக்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

நாகர்கோவில்

​நாகர்கோவில், மார்த்தாண்டம், திங்கள்சந்தை, குளச்சல், தக்கலை, கோட்டாறு உள்ளிட்ட நகரங்களில் பெரிய அளவிலான மால்களைத் தவிர மற்ற அனைத்துக் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், காய்கறி சந்தைகள், இறைச்சிக் கடைகள் நேற்று மாலை 4 மணிக்கு பின்னர் திறக்கப்பட்டு வர்த்தகம் நடைபெற்றது. பொதுமக்கள் ஒருவார காலத்துக்கு தங்கள் குடும்பத்துக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் கடை வீதிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5 மணி முதல் சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை உள்ளிட்ட தொலைதூர நகரங்கள் மற்றும் திருநெல்வேலிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்தில் ஏறுவதற்கு முன் பயணிகளுக்கு நடத்துநர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்து, சானிடைசர் வழங்கி கைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். பேருந்துக்குள் சமூக இடைவெளியுடன் பயணி களை அமர வைத்தனர். ஆனால், கரோனா அச்சம் காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் வந்திருந்தனர்.

இதனிடையே, நாளை முதல் தளர்வற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். பொது இடங்கள், சாலைகளில் வழக்கத்தைவிட கூடுதலாக ஆய்வு மேற்கொள்ளுதல், தேவையின்றி சுற்றி திரிவோர் மீது நடவடிக்கை எடுப்பது, பொதுமக்களுக்கு மருந்து மாத்திரை உட்பட அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வது குறித்தும், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை கண்காணிப்பு பணியை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

தூத்துக்குடி

இன்று அனைத்து வழித் தடங்களிலும் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும், என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT