Regional01

ஓசூரில் கூலித்தொழிலாளிக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் : அறுவை சிகிச்சை மூலம் இடது கண் அகற்றம்

செய்திப்பிரிவு

ஓசூர் மூக்கண்டப்பள்ளியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பசவராஜ் (45). இவர் தனக்கு இடது கண் பார்வை தெரியவில்லை எனக் கூறி, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இடது கண்ணை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருப்பது தெரிந்தது. மருத்துவமனை டீன் சுந்தரவேல் தலைமையில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் நிகில் பரத்வாஜ் நேற்று முன்தினம் பசவராஜிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். அவரது இடது கண் அகற்றப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது.

சேலத்தில் இருவர் அனுமதி

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த 50 வயது நபருக்கு கண்ணில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று அறிகுறி தென்பட்டுள்ளது. அவர் கரோனா நோய் பாதிப்புக்கு உள்ளாகி, கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், கருப்பு பூஞ்சை அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோல, ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு கண்ணில் கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுசம்பந்தமாக சுகாதாரத் துறை அதிகாரிகள் நோய் தொற்று பரவல் மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT