சேலம் மாநகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 60 வார்டுகளுக்கும் தலா ஒரு அலுவலரை, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நியமித்துள்ளார்.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோட்டைப் பகுதியில் உள்ள பல்நோக்கு அரங்கில் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசியதாவது:
சேலம் மாநகராட்சியில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,020 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 113 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வாங்கி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மதிய உணவு தேவைப்படுவோருக்கு தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்தல், வீட்டில் உள்ள பிற நபர்களை உடனடியாக தனிமைப்படுத்தி கண்காணித்தல் மூலம் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. களப்பணியாளர்கள், செவிலியர்கள், கண்காணிப்பு அலுவலர்களுடன் இணைந்து தடுப்புபணிகளை மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் தலா ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பணியாளர்கள், தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முழு விவரங்களையும் சேகரித்து தொற்று தடுப்பு மருந்துகள், கபசுரக்குடிநீர் விநியோகம், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். களப்பணியாளர்கள் மற்றும் தேவைகேற்ப தன்னார்வலர்களை ஈடுபடுத்தி, புதியதாக நோய்தொற்று ஏற்படா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.