கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், பலரும் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித் திரிந்து வருகின்றனர்.
விதி மீறுபவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர். சேலம்-நாமக்கல் மாவட்டங்களின் எல்லையான காளிப்பட்டியில் போலீஸார் சாலையை மறித்து தடுப்புகள் வைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி வாகனத்தில் சுற்றித் திரிந்தவர்களை பிடித்து கரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், அவர்களை திருக்குறளை ஒப்புவிக்க கூறினர்.
சிலர் தங்களுக்கு தெரிந்த சில திருக்குறள்களை தெரிவித்ததோடு, தொடர்ந்து திருக்குறள் தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.அவர்களிடம் போலீஸார் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை எடுத்துக்கூறி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.