பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய ஈரோடு மாநக ராட்சி அனுமதி அளித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு நேதாஜி பெரிய மார்க்கெட்டில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை சில்லரை வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து குவிகிறார்கள். இதேபோல் மளிகைக் கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாகச் சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் இக் கோரிக்கையை ஏற்றுள்ளது. இதுகுறித்து அதி காரிகள் கூறியதாவது;
மளிகைப் பொருட்களை வாங்க கூடும் மக்கள் கூட்டத்தை குறைக்கும் வகையில் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர், பெரிய மளிகைக் கடையை சேர்ந்தவர்கள் வாகனங்கள் மூலம் பொதுமக்கள் இருப்பிடத்திற்குச் சென்று வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை வியாபாரம் செய்யலாம்.
ஆனால் எந்தெந்த பகுதியில் வியாபாரம் செய்யப்போகிறோம் என்பது குறித்த தகவலை மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்கூட்டியே அவர்கள் தெரிவிக்க வேண்டும். தற்போது வாகனங்கள் மூலம் காய்கறி வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.