தூத்துக்குடி எப்சிஐ ரவுண்டானா பகுதியில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களை எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்தார். 
Regional02

ஊரடங்கை மீறிய 2,674 பேர் மீது வழக்கு பதிவு : தூத்துக்குடி எஸ்பி தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாநகரில் 20 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பதிவு மற்றும் இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எஸ்பி ஜெயக்குமார் நேற்று விவிடி சந்திப்பு மற்றும் எப்சிஐ ரவுண்டானா பகுதியில் ஆய்வு செய்து, தேவையின்றி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை தேவையில்லாமல் வெளியே வந்த 2,674 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 412 இருசக்கர வாகனங்கள், 20 ஆட்டோக்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மீது வழக்கு போடுவதோ, வாகனங்களை பறிமுதல் செய்வதோ காவல் துறையின் நோக்கமில்லை. கரோனா தொற்றை ஒழிக்க வேண்டும், மக்களை அதன் தாக்கத்திலிருந்து காக்க வேண்டும் என்பதுதான் காவல்துறையின் நோக்கம். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கரோனாவை அழிக்க முடியும்” என்றார்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் காவல் துறையினர் சார்பில் முகக்கவசம் அணியாத 783 பேரிடம் ரூ.1,56,600, சமூக இடைவெளியை கடைபிடிக்காத 19 பேரிடம் ரூ.9,500 என, மொத்தம் ரூ.1,66,100 அபராதம் வசூலிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT