கிருஷ்ணகிரியில் தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள், மருத்துவர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பேசினார். 
Regional02

கரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த - தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைக்க கிருஷ்ணகிரி ஆட்சியர் வேண்டுகோள் :

செய்திப்பிரிவு

கரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் மருத்துவ மனை உரிமையாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:

தனியார் மருத்துவமனைகள் தங்களின் பொறுப்பினை உணர்ந்து, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை மட்டும் அனுமதியளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆக்சிஜன் உபயோகத்தை கண்காணிக்க அந்தந்த தனியார் மருத்துவமனைகளில் குழு ஒன்று அமைத்து கண்காணிக்க வேண்டும். அதன் விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 25 தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை உள்ள பயனாளிகளிடம் தனியார் மருத்துவமனையில் கட்டணம் ஏதும் பெறாமல் சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் ஒரு நபரை நியமித்து இலவசமாக சிகிச்சை அளிக்க வழி வகை செய்யவேண்டும். கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அரசு அறிவித்த கட்டணத்தையே பெற வேண்டும். அதற்கு மேல் கூடுதலாக கட்டணம் பெற கூடாது. இதேபோல், அவசர ஊர்திகளுக்கான கட்டணம், அரசு வழிகாட்டுதலை விட கூடுதலாக வசூலிக்க கூடாது. தனியார் மருத்துவமனைகள் கரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதாரப்பணிகள் கோவிந்தன், தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT