Regional02

மாங்காய் மகசூல் பாதிப்பால் - கொள்முதல் விலையை அதிகரிக்க மா விவசாயிகள் வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், மாங்கூழ் தொழிற்சாலை நிறுவனத்தினர் மாங்காய்கள் டன்னுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட மாங்கனி விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சவுந்தர்ராஜன் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மாங்காய்களுக்கு உரிய விலையை மாங்கூழ் தொழிற்சாலை நிறுவனத்தினர் வழங்குவதில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து இயற்கை இடர்பாடுகளுக்கு இடையில் போராடி மா மகசூலை விவசாயிகள் செய்கின்றனர்.

கடந்த ஆண்டு மா மகசூல் நன்றாக இருந்தது. தோத்தாபுரி மாங்காய் ஒரு டன் ரூ.25 ஆயிரம் என கொள்முதல் செய்தனர். ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே மகசூல் உள்ள நிலையில் டன் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் விலை கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது கரோனா பொதுமுடக்கத்தை பயன்படுத்தி மாங்கூழ் தொழிற்சாலை நிறுவனத்தினர் மா விவசாயிகளை ஏமாற்றக்கூடாது.

பொதுமுடக்க நேரத்தில், அதிகாரிகளையும், ஆட்சியாளர் களையும் சந்திக்க முடியாத சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது வேதனையாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் துறையினர் மா விவசாயிகளின் அவல நிலையைப் பற்றி கவலைப்படாமல் மெத்தனமாக இருப்பது ஏன் என தெரியவில்லை. எனவே கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கேற்ற நியாயமான விலை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என மாங்கனி விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். பொது முடக்கத்தை ஏற்று மா விவசாயிகள் போராட்டத்தை தவிர்க்கின்றோம்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் கேட்டபோது, தற்போது கரோனா சூழ்நிலையால், முத்தரப்பு கூட்டத்தை கூட்ட முடியாத நிலை உள்ளது. முதற்கட்டமாக வேளாண் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பின்னர் விவசாயிகள் மற்றும் மாங்கூழ் தொழிற்சாலை உரிமை யாளர்களுடன் பேசி மாவிற்கான விலை நிர்ணயிக்கப்படும், என்றார்.

SCROLL FOR NEXT