தமிழகத்தில் முழுஊரடங்கு காரணமாக கரோனா பரவல் குறைந்து வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக் கைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையத்தை அவர் ஆய்வு செய்தார். கிராமங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதியாக 45 நடமாடும் பரிசோதனை வாகனங்களையும் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஹைகிரவுண்ட் காந்திமதியம்மன் பள்ளி மற்றும் மகாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபத்திலுள்ள கரோனா சிகிச்சை மையங்களை பார்வையிட்டார்.
அவர் கூறும்போது, ``தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்சிஜன் இருப்பு, தேவைகள், மருந்துகள் இருப்பு, படுக்கை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழகத்தில் முழுஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக கரோனா பரவல் குறைந்து வருகிறது. முழுஊரட ங்கை நீட்டிப்பது தொடர்பாக தற்போதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, வருவாய் அலுவலர் பெருமாள், சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதித்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ வசதிகள், படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்யுமாறு மருத்துவ அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
வடசேரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்களிடம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.
வடசேரி பெரியராசிங்கன் தெருவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட அவர், அப்பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள், உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களை குறித்த நேரத்தில் வழங்கிடுமாறு சுகாதாரத்துறை அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உடனிருந்தார்.