தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் தொழிலாளி இறந்ததாக வெளியான தகவலை மருத்துவமனை டீன் மறுத்துள்ளார். கரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (59). வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 10-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் திடீரென அவரது கண்ணீல் வீக்கம், தானாக நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, பூஞ்சை தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே, கருப்பு பூஞ்சை எனப்படும் மியூக்கோர்மைக்கோசிஸ் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் கடந்த 17-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கண் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே மீண்டும் கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சவுந்திரராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவர் மியூக்கோர் மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன் என்பவர் மியூக்கோர் மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது.
கரோனா தாக்கம் காரணமாகவே அவர் உயிரிந்துள்ளார். தற்போது அவருக்கு தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வந்திருந்தாலும், ஏற்கெனவே ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது நுரையீரல் 80 சதவீதம் அளவுக்கு பாதிப்படைந்துவிட்டது. அதன் காரணமாகவே அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்துக்கும் கண்ணில் ஏற்பட்ட பாதிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது கண்ணில் ஏற்பட்டது வழக்கமாக எல்லோருக்கும் ஏற்படும் சாதாரண பூஞ்சை தொற்று தான். அது மியூக்கோர் மைகோசிஸ் தொற்று அல்ல என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. . மியூக்கோர் மைகோசிஸ் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள், மருந்துகள் மருத்துவமனையில் உள்ளன என்றார்.
சவுந்திரராஜன் கரோனா தாக்கம் காரணமாகவே அவர் உயிரிந்துள்ளார். அவரது கண்ணில் ஏற்பட்டது வழக்கமாக எல்லோருக்கும் ஏற்படும் சாதாரண பூஞ்சை தொற்று தான் என்றார் டீன் ரேவதி பாலன்.