Regional02

கரோனாவால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து - குழந்தைகளை பாதுகாக்க மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழு : சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தகவல்

செய்திப்பிரிவு

கரோனாவால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்படவுள்ளதாக, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குப்பை சேகரிப்பு வண்டிகளில் ஒலிபெருக்கி அமைத்து கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி, கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க பெரிய வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மற்றும் கொசு பரவலை தடுக்க கைப்பம்புகள் மூலம் புகை மருந்து அடிக்கும் பணி ஆகியவற்றின் தொடக்க நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா 2-வது அலையை தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக 400 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க முதல்வர் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இக்குழுவில் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்ட 7 பேர் இடம் பெறுவர்.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள், தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாப்பது, தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு கவுன்சலிங் கொடுப்பது போன்ற பணிகளுக்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக கரோனா பாதுகாப்பு மையம் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவை அமைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

இந்தக்குழு வாரம் ஒரு முறை கூட்டம் நடத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளை அரசு காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்து உறவினர்களுடன் இருப்பதாக கூறினால் அதனை பரிசீலித்து அனுமதி அளிக்கப்படும். சிறிய குழந்தைகள் என்றால் அரசு காப்பகத்தில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோர் உயிரிழந்திருந்தாலோ அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலோ அவர்களது குழந்தைகளை பாதுகாத்து பராமரிக்க தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் அடைக்கலாபுரத்தில் இரண்டு காப்பகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கரோனா உதவி மையத்தில் தகவல் தெரிவித்தால் அந்த குழந்தைகள் இந்த இல்லங்களில் வைத்து பராமரிக்கப்படுவார்கள்.

கிராமப்புற மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் மாவட்டத்தில் 1,745 கிராமங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டு, முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது மக்கள் மத்தியில் ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு தடுப்பூசி போடுவதற்கு வருகின்றனர் என்றார்.

குழந்தைகளை பராமரிக்க சிறப்பு ஏற்பாடு

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் யாராவது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டி ருந்தாலோ அல்லது உயிரிழந்து இருந்தாலோ, அக்குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைகள் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம். அக்குழந்தைகளுக்கான தேவைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இணைப்பு கட்டிடம், 3-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரியிலோ, குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 (சைல்டுலைன்), குழந்தைகள் நலக்குழு 04652 233828 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 04652 278980 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT