Regional01

சேலத்தில் 103 வாகனங்கள் மூலம் மளிகை, காய்கறி விற்பனை : மாநகராட்சி ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீட்டின் அருகே காய்கறி, பழம் மற்றும் மளிகைப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கிட 103 வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல பகுதிகளுக்கு 32 காய்கறி வாகனங்கள், 6 பழம் விற்பனை வாகனங்கள், 2 மளிகைப் பொருட்கள் விற்பனை வாகனங்கள் என 40 நடமாடும் விற்பனை வாகனங்களும், அஸ்தம்பட்டி மண்டலப் பகுதிகளுக்கு, 10 காய்கறி வாகனங்கள், 2 மளிகைப் பொருட்கள் விற்பனை வாகனங்கள் என 12 நடமாடும் விற்பனை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், அம்மாப்பேட்டை மண்டலப் பகுதிகளுக்கு, 21 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள், கொண்டலாம்பட்டி மண்டலப் பகுதிகளுக்கு 25 காய்கறி வாகனங்கள், 5 மளிகைப் பொருட்கள் விற்பனை வாகனங்கள் என 30 நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியதாவது:

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீட்டின் அருகே காய்கறி, பழம் மற்றும் மளிகைப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கும் வகையில் 103 நடமாடும் வாகன விற்பனை நிலையங்கள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப கூடுதல் வாகன விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் நலன் மட்டும் இன்றி பொது நலன் கருதி, காய்கறி வாங்க சந்தைகளுக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொருவரும் தமது பொறுப்பினை உணர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தோடு ஒத்துழைத்து கரோனா பரவலை தடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT