Regional02

கரோனாவால் இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவில் சுடுகாடு உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்தில், கரோனாவால் இறந்த 3 பேரை புதைத்துள்ளனர். இதையடுத்து நேற்று பகல் 12 மணிக்கு இதேபோல் கரோனாவால் இறந்த ஒருவரின் உடலை புதைப்பதற்காக ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். அப்போது, அப்பகுதி மக்கள் இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆம்புலன்ஸ் வாகனத்தை செல்லவிடாமல், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து போலீஸ் எஸ்ஐக்கள் சிவசந்தர், பாஸ்கர் ஆகியோர் தலைமையில் அங்கு வந்த போலீஸார் மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் அதை ஏற்காததால், லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், இறந்தவர்களை புதைக்க நேதாஜி சாலையில் தனியாக இடவசதி உள்ள நிலையில், குடியிருப்பு பகுதியில் கொண்டு வந்து கரோனாவால் இறந்தவர்களை புதைப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் உள்ளதால் இங்கு கரோனாவால் இறந்தவர் களை புதைக்கக்கூடாது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT