தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே இ-பதிவு, இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்த காவல் துறையினர் தனியாக சோதனைச் சாவடி அமைத்துள்ளனர். படம்: என்.ராஜேஷ் 
Regional02

தூத்துக்குடியில் வாகன சோதனை தீவிரம் : இ-பதிவு, இ-பாஸ் இல்லாமல் வருவோருக்கு அனுமதி மறுப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் போலீஸார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். இ-பதிவு மற்றும் இ-பாஸ் இல்லாமல் வருவோரை நகரின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.

கரோனா பரவலை தடுக்க தமிழகஅரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனால், மக்களில் ஒருபகுதியினர் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதால், கரோனா தடுப்பு பணி கேள்விக்குறியானது. இதனால் தூத்துக்குடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையை நேற்று தீவிரப்படுத்தினர்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் மட்டும் 20 இடங்களில் சாலை தடுப்புகளை போட்டு மறித்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதுபோலநகரின் அனைத்து நுழைவு வாயில்களையும் போலீஸார் சீல் வைத்தனர். இ-பதிவு மற்றும் இ-பாஸ் வைத்திருப்பவர்களை மட்டுமே போலீஸார் அனுமதித்தனர். இதற்காக தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே தனியாக சோதனைச் சாவடி அமைத்துள்ளனர்.

அத்தியாவசிய தேவை இல்லாமல் யாரையும் நகருக்குள் அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். மேலும், மாநகர பகுதிகளுக்குள் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதனால் தூத்துக்குடி நகரின் முக்கிய சாலைகளில் நேற்று காலை 10 மணிக்கு பின்னர் வாகனங்களின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது.

நாகர்கோவில்

நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் மாவட்டம் முழுவதும் தேவையின்றி சுற்றி திரிவோர் மீது போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். ஊரடங்கை மீறியதாக இரு நாட்களில் 3,910 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT