திருநெல்வேலியில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு நேற்று 2-வது நாளாக திருக்குறளை எழுத வைத்து நூதன தண்டனையை போலீஸார் வழங்கினர்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாகவே இருசக்கர வாகனங்களில் பலர் தேவையின்றி வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இ-பதிவு இல்லாமல் அவ்வாறு செல்வோரை பிடித்து போலீஸார் எச்சரித்து அனுப்பும் நிலையில் கடந்த 2 நாட்களாக வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளும் தொடங்கி யிருக்கின்றன. தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை வழிமறித்த போலீஸார், 5 திருக்குறளை எழுதி கொடுக்கும் நூதன தண்டனையை அவர்களுக்கு வழங்கினர். இந்த நூதன தண்டனை நேற்று 2-வது நாளாக அளிக்கப்பட்டது.
வண்ணார்பேட்டையில் மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இ-பதிவு இல்லாமல் தேவையின்றி வாகனங்களில் செல்வோரை பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் போலீஸார் எச்சரித்துள் ளனர்.
இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களில் சுற்றிய 123 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,026 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 19 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
86 வாகனங்கள் பறிமுதல்