ஊரடங்கு உத்தரவை மீறி செய்துங்கநல்லூரில் வாரச்சந்தை 2-வது வாரமாகநேற்றும் நடைபெற்றது. மக்கள் குவிந்ததால் அரசின் விதிகள் கேள்விக்குறியாயின.
தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்தமுழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மளிகை, காய்கறி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க அரசுஅனுமதி அளித்துள்ளது. வாரச்சந்தைகள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் வாரச்சந்தை கூடும். சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து பொருட்கள் வாங்கிச் செல்வர்.
முழு ஊரடங்கு அமலில் இருந்தபோதும் அதனை மீறி கடந்த வாரம் புதன்கிழமை இந்த வாரச்சந்தை கூடியது. அதன்பின்னர் போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சந்தையை கலைத்தனர். அடுத்த வாரம் (மே 19) வாரச்சந்தை கிடையாது. வியாபாரிகள், பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்பை மீறி நேற்றும் செய்துங்கநல்லூர் வாரச்சந்தை கூடியது. மக்கள் குவிந்ததால் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலர் முகக்கவசம் அணியவில்லை. இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு வந்து, வியாபாரிகளை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டதால் அபராதம் விதிக்கப்பட்டு, எடை கருவிகளை பறிமுதல் செய்தனர். அதன் பிறகே வியாபாரிகள் கலைந்து சென்றனர்.