பெருந்துறையில் செயல்படும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 400 படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:
பெருந்துறையில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்காக முழுமையாக இயங்குகிறது. அருகாமை மாவட்டத்தில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் இங்கு வருகின்றனர். இதனால், கூடுதல் படுக்கை வசதியுடன் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 400 படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த வளாகம் 400 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் கொண்டதாக அமையவுள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் ஒரு மாத காலத்திற்குள் இவ்வளாகத்தைக் கட்டி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மருத்துவக் கல்லூரி முதல்வர் மணி, ரோட்டரி மருத்துவ பாதுகாப்பு டிரஸ்ட் நிறுவனர் சகாதேவன், தலைவர் செங்குட்டுவன், செயலர் சிவபால், பொருளாளர் மோகன்ராஜ், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் சிவசங்கரன் விஜயசந்திரன், ஈரோடு ரோட்டரி தலைவர் சிவக்குமார் பங்கேற்றனர்.