சேலம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், நேற்று சிகிச்சைக்கு வந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படம்: எஸ். குரு பிரசாத் 
Regional01

சேலம் அரசு மருத்துவமனையில் - ஆக்சிஜன் படுக்கை நிரம்பியதால் ஆம்புலன்ஸில் காத்திருந்த தொற்றாளர்கள் :

செய்திப்பிரிவு

சேலம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், நேற்று சிகிச்சைக்கு வந்த கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் தினசரி 600-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்ட 4,500-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பிய நிலையில், புதிதாக வருபவர்களுக்கு ஏற்கெனவே சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து சென்ற பின்னரே படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்கும் நிலையுள்ளது.

தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத நிலையில், அங்கிருந்து கரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதும் அதிகரித்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் இருந்து தினமும் அரசு மருத்துவமனைக்கு வரும் தொற்றாளர்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமல், அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையுள்ளது. சில நேரங்களில் ஆம்புலன்ஸில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறியதாவது:

அண்மையில் சேலத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தனியார் மருத்துவமனைகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார். அதை செயல்படுத்தும் வகையில் விரைந்து தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குவதுடன், அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்தவும், இரும்பாலையில் அமைக்கப்படும் கரோனா சிகிச்சை மையத்தை விரைந்து திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT