ஈரோட்டில் இயங்கும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:
ஈரோட்டில் 50-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் இயக்கப்படுகிறது. இதற்கு தனியாரிடம் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு ஆக்சிஜன் வழங்க மாவட்டம் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
ஆக்சிஜன் வசதி இல்லாததால் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே, தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு வழக்கம் போல் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.